சென்னை:
முன்னணி தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக அனுப் பாக்சி நியமிக்கப்பட்டுள்ளார்.ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைமைப் பொறுப்பிற்கான அனுப் பாக்சியின் நியமனத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் 27-ம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பொறுப்பில் இருப்பார்.
தற்போது ஹெச்டிஎஃப்சி வங்கியின் எம்.டி. மற்றும் சி.இ.ஓ.வாக உள்ள சசிதர் ஜகதீசன், வரும் 26-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்குப் பதிலாக அனுப் பாக்சி பொறுப்பேற்க உள்ளார்.
பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மேலாண்மைப் பட்டமும், கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் பட்டமும் பெற்றுள்ள அனுப் பாக்சி,
வங்கி, மூலதனச் சந்தை, காப்பீடு, செல்வ மேலாண்மை உள்ளிட்ட நிதித்துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர். கடந்த 1992-ம் ஆண்டு முதல் ஐசிஐசிஐ குழுமத்தில் பணியாற்றி வரும் அவர், 2017 முதல் 2023-ம் ஆண்டு வரை ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
கடந்த 2023 ஜூன் முதல் ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் அவர், தற்போது ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.